ஹாங்காங்: கொரோனா தொற்றுகள் குறைந்துள்ளதால் ஹாங்காங்கில் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் திறக்கப்படுகின்றன.

ஹாங்காங்கில் குறைந்திருந்த கொரோனா தொற்று ஜனவரி முதல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அங்கு தொற்றுகள் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளை தளர்த்தி நீச்சல்குளங்கள், கடற்கரைகளை திறக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார செயலாளர் சோபியா சான் கூறி இருப்பதாவது: நோய்த்தொற்றுகள் கணிசமாகக் குறைந்துவிட்டன. ஆகையால் சில கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் கடற்கரைகள் மற்றும் நீச்சல் குளங்கள் மீண்டும் திறக்கப்படும். அதே நேரத்தில் மதக் கூட்டங்கள் அதிகபட்சமாக 30% பேருடன் தான் நடத்தப்பட வேண்டும். சினிமாக்கள் மற்றும் பூங்காக்களில் 50% முதல் 75% வரையே மக்கள் கூட்டம் இருக்க வேண்டும்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த விரும்புகிறோம், தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் அங்கிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்துதல் காலம் 21ல் இருந்து 14 நாட்களாக குறைக்கப்படுகிறது. அதிக கொரோனா தொற்றுகள் பதிவாகி வரும் பிரேசில், அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றார்.