சென்னை,
நாட்டில் பணப்புழக்கத்திற்கும், பண பரிவர்த்தனைக்கும் ஏற்பட்டுள்ள கடும் கட்டுப்பாடு காரணமாக சென்னை உள்பட 8 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடும் சரிவை கண்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு திடீரென ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து பணம் எடுக்கவும், கொடுக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதன் காரணமாக நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகின.
கடந்த ஜனவரி முதல் மார்ச் மாத வரையிலான காலாண்டில் வீடுகள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.
ரியல் எஸ்டேட் விற்பனை தொடர்பாக நாடு முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு சென்னை, பெங்களூரு, புனே, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, நொய்டா, குருகிராம் ஆகிய பெரு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு முடிவில், எட்டு நகரங்களிலும் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர, டிசம்பர் மாத காலாண்டில் 28,472 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டின், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களின் காலாண்டில் புதிதாக வீடு கட்டுமான பணிகள் 19.46 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த காலக்கட்டத்தில் 22,897 வீடுகளை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கட்டியுள்ளன. ஆனால், கடந்த ஆண்டின்போது இந்த காலக்கட்டத்தில் இந்த அளவு 28,428 ஆக இருந்தது.
அதே நேரத்தில், புதிதாக கட்டப்பட்ட வீடுகளில் விற்பனை செய்யப்படாத வீடுகளின் எண்ணிக்கை 3.12 சதவீதம் சரிந்து 4,71,855ஆக உள்ளது.
தற்போது பணப்புழக்கம் ஓரளவுக்கு சரியானாலும், பண பரிவர்த்தனையில் கட்டுப்பாடுகள் நீடிப்பதால் புதிய வீடுகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. இதனால் வீடுகள் விலையும் 1.67 சதவீதம் சரிந்துள்ளது.
மேற்கண்ட 8 நகரங்களிலும் வீடுகள் விற்பனை சராசரியாக ஒரு சதவீதம் சரிந்து 28,131 ஆக உள்ளது. ஆனால், வரும் நிதியாண்டில் வீடு விற்பனை மேலும் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது.