நெட்பிலிக்ஸ் மற்றும் எச்.பி.ஓ. பெயரில் போலி ஒப்பந்தங்கள் மூலம் 1800 கோடி ரூபாய் அபேஸ் செய்த ஹாலிவுட் நடிகருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பண மோசடி தொடர்பாக நடிகர் சாக் அவெரி என்ற சக்கேரி ஜோசப் ஹார்விட்ஸ் மீது 2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது சங்கிலித்தொடர் வியாபாரம் போல், ஒருவரிடம் இருந்து வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேறொருவரை ஏமாற்றி பணத்தை திருப்பித் தந்திருக்கிறார்.
இதுவரை 250 நபர்களை ஏமாற்றிய ஹார்விட்ஸ் மொத்தம் சுமார் 4879 கோடி ரூபாய் அளவு பணத்தில் புழங்கியிருக்கிறார். ஒருவரிடம் இருந்து வாங்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்துக் கொண்டு மீதியை மற்றவரிடம் இருந்து வாங்கி கடனை அடைத்ததில் கிடைத்த லாபத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
43 கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொகுசு பங்களாவை விலைக்கு வாங்கிய ஹார்விட்ஸ் அதன் உள்ளலங்கார வேலைகளுக்கு மட்டும் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவழித்திருக்கிறார். விலையுயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் தனி ஜெட் விமானம் என்று ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்த ஹார்விட்ஸ் இரவு விடுதிகள் மற்றும் சூதாட்ட விடுதிகளில் மட்டும் 52 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்திருக்கிறார் என்று நீதிமன்ற விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
பிறரை ஏமாற்றி சம்பாதித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஹார்விட்ஸ்க்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்ததோடு 250 நபர்களுக்கு தரவேண்டிய சுமார் 1750 கோடி ரூபாயையும் திரும்ப அளிக்க திங்களன்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.