ஆம்ஸ்டர்டாம்: ஹாலந்து நாட்டின் விமான சேவை நிறுவனமான கே.எல்.எம் வழங்கிய நிதியுதவியுடன், அந்நாட்டின் டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள புதிய விமானம், வழக்கமான போக்குவரத்து விமானத்தைவிட 20% எரிபொருள் குறைவாக எடுத்துக்கொள்வதுடன், அதிகபட்சமாக 314 பேர் வரை பயணம் செய்யக்கூடியதாகவும் உள்ளது.

டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒரு முன்மாதிரி வான் பயண திட்டமாக இதை மேற்கொண்டது. இந்த விமானத்திற்கு ஒரு புகழ்பெற்ற கிதார் இசைக்கருவியின் நினைவாக கிப்ஸன் ஃபிளையிங்-V எலெக்ட்ரிக் கிதார் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஏனெனில், இந்த கிதார் இசைக்கருவி எடி வான் ஹேலன், ஜிமி ஹென்ரிக்ஸ், பிரையன் மே மற்றும் கெய்த் ரிச்சர்ட்ஸ் ஆகிய பல இசைக் கலைஞர்களால் இசைக்கப்பட்டதாகும். இந்த விமானம் V வடிவத்தில் அமைந்துள்ளதும் மற்றொரு சிறப்பம்சமாகும்.

இந்த வடிவமைப்பின் சிறப்பம்சங்கள் என்னவென்றால், இதன் இறக்கைகளில்தான் பயணிகள் அமரும் இடம், சரக்கு வைக்குமிடம், எரிபொருள் டேங்க் உள்ளிட்டவை இடம்பெறுமாறு அமைக்கப்பட்டுள்ளன.