சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு பேருக்கு HMPV தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம், ஆனால், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவிப்புவெளியிட்டுள்ளது. இருப்பினும் மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.
சீனாவில் கண்டறியப்பட்ட HMPV (ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் ) தொற்று இந்தியாவில் நுழைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு இந்த தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் இரண்டு பேர் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள். அதன்படி, சென்னையில் ஒரு குழந்தைக்கும் சேலத்தில் ஒரு குழந்தைக்கும் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, எச்.எம்.பி.வி. வைரஸ் புதிது அல்ல. இது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வைரஸ் ஆகும். 2001-ம் ஆண்டு இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் தொற்றால் சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்பிறகு தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்களுடன் ஆன்லைன் மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தியது.
இந்த வைரஸ் நோய்த்தொற்றுகள் சுயக்கட்டுப்பாடு, உடல் சோர்வு ஏற்படாமல் பார்த்து கொள்வது, ஓய்வு எடுப்பது உள்ளிட்ட கவனிப்புடன் சரிசெய்யப்படுகின்றன. தும்மல், இருமல் வரும்போது வாய், மூக்கை மூடுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், நெரிசல் மிகுந்த இடங்களில் முககவசம் அணிதல், தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பது போன்ற பிற சுவாச நோய்த் தொற்றுகளுக்கான தடுப்பு நடவடிக்கைகளே எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றுக்கும் பொருந்தும்.
இந்த வைரஸ் தொற்று கட்டுப்படுத்தக்கூடியது என்பதால் பீதி அடையத் தேவையில்லை .
இந்த வைரஸ் தொற்றை நினைத்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தும்மல் மற்றும் இருமல் வரும்போது கையால் வாயை மூடி கொள்வதோடு அடிக்கடி கையை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். இந்த நோய் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.