டெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களைவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது என்றும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து இதுவரை காஷ்மீர் ஒரு உயிர்கூட பலியாகவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.  இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே மக்களவையில் காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் எழுப்பி அமளி நடைபெற்றது. அதுபோல மாநிலங்களவையிலும், காஷ்மீர்  விவகாம்  குறித்து விவாதிக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.  காஷ்மீரில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக இணையதள சேவைகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும்,  மக்களின் இயல்பு நிலை முடங்கி உள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில் இன்று மாநிலங்களவை சபை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து  உரையாற்றினார். அப்போது,  காஷ்மீரில் உள்ளூர் நிர்வாகம் உறுதியாக இருக்கும் பட்சத்தில், இணைய சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப் படும். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு (ஆகஸ்டு 5ந்தேதி) காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.

‘‘ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை முற்றிலும் திரும்பி வருகிறது. லேண்ட்லைன் போன்கள் மற்றும் மொபைல் போன்கள் செயல்படுகின்றன. நீதிமன்றங்கள், பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. வாகனங்கள் இயங்கி வருகின்றன. மருத்துவ சேவையும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இதுவரை அங்கு  காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று தெரிவித்தவர்,  காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து உள்ளூர் நிர்வாகம் திருப்தி அளிக்கும் நேரத்தில் இணையதள சேவைக்கான தடைகள் தளர்த்தப்படும் என்றும் கூறினார்.

காஷ்மீரில், சில அண்டை நாட்டு ஆர்வலர்களும்  பதுங்கியுள்ளனர் என்று கூறியவர்,  ஸ்ரீநகரின் தெருக்களில் ரத்த ஆறு ஓடுவதாக அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அப்படி எந்தவித நிகழ்வுகளும் அங்கு நடைபெறவில்லை. காஷ்மீரில் தற்போது அனைத்து செய்தித்தாள்களும், தொலைக்காட்சி சேனல்களும் இயங்குகின்றன. நான் குலாம் நபி ஆசாத்துக்கு சவால் விடுக்கிறேன். நான் இங்கு தெரிவித்த தகவல்களை, உண்மை இல்லை என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? இந்த விவகாரம் குறித்து ஒரு மணி நேரம் கூட ஆலோசனை செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 13-ம் தேதி வரை நடை பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.