சென்னை; உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 107வது இடத்தில் உள்ள நிலையில், இந்துத்துவா.. இந்தி திணிப்பு.. வெறுப்பு அரசியல் போன்றவை பசிக்கான தீர்வல்ல. என மோடி அரசை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

உலக பட்டினிக் குறியீடு பட்டியலை ஆண்டு தோறும் அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் வெளியிட்டு வருகின்றன. சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் வளர்ச்சி, ஆகியவற்றை தேசிய, மாநில,மண்டல அளவில் ஆய்வு செய்து ஆண்டு தோறும் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த பட்டியலில் மொத்தம் 121 நாடுகள் உள்ள நிலையில், இந்தியா  107வது இடத்தில் உள்ளது.  இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த பட்டியலில் கடந்த 2020ம் ஆண்டில் 94வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது மேலும் பின்தங்கி 107 இடத்தக்கு சென்றுள்ளது.  அதன்படி, இலங்கை 60, வங்கதேசம் 84, நேபாளம் 81 மற்றும் பாகிஸ்தான் 99வது இடத்திலும் உள்ளது.  உலக பசி குறியீட்டில் இந்தியா 107வது இடத்திற்கு தள்ளப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,  பிரதமர் எப்போது குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு, பசி மற்றும் வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் வீண்விரயம் போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்?

இந்தியாவில் 22.4 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள். உலக பசி குறியீட்டில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது. மோடி அரசின் 8 ஆண்டுகளில் 2014ல் இருந்து எங்களின் மதிப்பெண் மிகவும் மோசமாகிவிட்டது.

மொத்த இந்தியர்களில் 16.3 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், அதாவது அவர்களுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. 19.3 சதவீத குழந்தைகள் வாழ்வு வீணடிக்கப்படுகிறது, 35.5 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர்.

இந்துத்துவா, இந்தி திணிப்பு, வெறுப்பு அரசியல் பரப்புவது உள்ளிட்டவை பசிக்கான தீர்வு அல்ல என விமர்சித்துள்ளார்.