பாக்பத்

றைவனுக்கு காவடி எடுக்கும் இந்துக்கள் இஸ்லாமியர் தயாரித்த காவடியைப் பயன்படுத்தக் கூடாது என இந்துத்வா தலைவர் சாத்வி பிராச்சி கூறியது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

காவடி எடுப்பது என்பது இந்துக்களுக்கு முக்கியமான வேண்டுதல் ஆகும். தென் மாநிலங்களில் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் இந்த வேண்டுதல் அதிக அளவில் உள்ளது. காவடி என்பது ஒரு கட்டையில் இரு பக்கமும் பித்தளை சொம்பு அல்லது குடத்தைக் கட்டி எடுத்துச் செல்வதாகும். அந்த சொம்பில் பால்,பன்னீர், கங்கை நீர் போன்ற பொருட்களை எடுத்துச் செல்வது வழக்கமாகும்

ஆவணி மாதத்தின் போது லட்சக்கணக்கான சிவபக்தர்கள் சிவனின் அபிஷேகத்துக்கு கங்கை நீரைக் காவடியில் சுமந்து செல்வது ஹரித்வார் போன்ற பகுதிகளில் வழக்கமாக நடக்கும். இந்த மாதத்தை வட மொழியில் சிரவணம் எனச் சொல்வார்கள். இது சிவனுக்கு உகந்த மாதம் ஆகும். சிரவண மாதத்தில் லட்சக்கணக்கான காவடிகளை இஸ்லாமியர்கள் தயாரித்து விற்பார்கள்.

இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முக்கிய தலைவர்களில் சாத்வி பிராச்சி ஒருவர் ஆவார். இவர் உ பி மாநிலத்தில் பாக்பத் மாவடத்தில் உள்ள தாகா என்னும் ஊரில் ஒரு இந்து இளைஞர் முகாமில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர். “சிரவண மாதத்தில் காவடிகள் விற்பதால் பெருமளவில் இஸ்லாமியர்கள் லாபம் அடைகின்றனர். நமது நம்பிக்கையை வெறுப்பவர்கள் லாபம் அடைய நாமே உதவக்கூடாது.

எனவே ஹரித்வார் போன்ற புனித யாத்திரைக்குக் காவடி எடுத்துச் செல்லும் இந்துக்கள் யாரும் இஸ்லாமியர்கள் தயாரித்த காவடியை வாங்க்கூடாது. இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் இஸ்லாமியர் தயாரிக்கும் காவடிகளை புறக்கணிக்க வேண்டும்” எனத் தனது உரையில் தெரிவித்துள்ளார். இந்த பேச்சு அப்பகுதியில் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

சாத்வி பிராச்சியின் சர்ச்சைக்குரிய உரை குறித்து உடனடியாக விசாரணை நடத்த பாக்பத் மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.