இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பெனசிர் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்து குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறை என கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள இந்து குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணகுமாரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சிந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அங்கு அவர், தார் பகுதியிலுள்ள இளம்பெண்களின் கல்வியையும், சுகாதாரத்தையும் பெறுவதற்காகவும் அவர்களுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறார்.
இவர் பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தனது வெற்றிக்குறித்து ஊடகங்களுக்கு பேசிய கிருஷ்ணகுமாரி, ‘தார் பகுதியிலிருந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு தேர்வான முதல் நபராக நான் இருப்பேன். தார் பகுதியில் கர்ப்பிணி பெண்களின் வாழ்க்கை மிகவும் மோசமாக உள்ளது. நான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை அடைந்தபின் அந்நிலையை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவேன் என்றும், தன்னை எம்.பி.யாக்கிய பிளவால் பூட்டோ மற்றும் பார்யால் டல்பூர் ஆகியோருக்கு நன்றி என்றார்.
முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாகிஸ்தான் வரலாற்றில் இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.