க்னோ

த்தரப்பிரதேச மடாதிபதியான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆசார்ய மகாராஜ் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடையப்போவதாக மிரட்டி உள்ளார்.

பாஜக ஆளும் உபி மாநிலத்தில் பல மடங்களும் மடாதிபதிகளும் உள்ளனர். இவர்களில் சிலர் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளனர்.   குறிப்பாக கொரோனா 2 ஆம் அலையின் போது அரசு கும்பமேளாவை நிறுத்த முயன்றபோது இந்த மடாதிபதிகளை மீறி எதுவும் செய்ய இயலாத சூழல் நிலவியது.   இவர்களில் ஜகத்குரு பரமஹன்ஸ் ஆசார்ய மகாராஜ் என்பவர் ஒருவர் ஆவார்.

இவர் சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.  அதில் அவர், “அக்டோபர் 2ஆம் தேதிக்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்காவிட்டால் நான் சரயு நதியில் ஜல சமாதி அடைவேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் 15 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.  அவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை சந்தித்ததையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.