திருப்பூர்:
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு நிதி உதவி அளிக்காததால், இந்து முன்னணியினர் திருப்பூரில் உள்ள துணித் தொழிற்சாலை அலுவலகத்தை அடித்து உடைக்கும் காட்சி தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த 2ம்தேதி கொண்டாடப்பட்ட நிலையில், பல இடங்கள் இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலை யில், திருப்பூரில் ஏராளமான துணித்தொழிற்சாலை நிறுவனங்கள் உள்ள பகுதியில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டது.
இந்த விழாவுக்காக இந்துமுன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் அங்குள்ள துணி நிறுவனங்களிடம் பணம் வசூலித்து வந்த நிலையில், குறிப்பிட்ட நிறுவனத்திடம் ரூ.10 ஆயிரம் கேட்டு தொந்தரவு படுத்தியதாகவும், நிர்வாகம் பணம் தர மறுத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, இந்து முன்னணியைச் சேர்ந்த குண்டர்கள் சிலர், பணம் கொடுக்க மறுத்த துணித்தொழிற்சாலைக்குள் புகுந்து அங்குள்ள கண்ணாடிகளை உடைத்தும், பொருட்களை அழித்தும் சூறையாடினர். அங்கு வேலைசெய்து வந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில், அந்த தொழிற்சாலையைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகி சுரேஷ் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது…