“புஷ்பா,..கண்ணீரை வெறுக்கிறேன்..”‘
ஷர்மிளா தாகூரிடம் அமர் பிரேம் படத்தில் இந்த டயலாக்கை ராஜேஷ்கன்னா சொல்லச் சொல்ல திரும்பத் திரும்ப வீடியோ டெக் ரிவர்ஸ் போகும்.
நிறைய பேர் ஆனந்த் படத்தை சிலாகித்து சொல்வார்கள்.. நமக்கு என்னவோ அமர் பிரேம்தான் மனுஷன் கலந்து கட்டி விளையாடி இருப்பார்..
ஆச்சரியமான விஷயம் என்றால் 1940-களில் தொடங்கி இந்தி திரையுலகை ராஜ்கபூர், தேவ்ஆனந்த், திலீப்குமார் என மூவேந்தர்கள் ஆட்டுவித்தாலும், இந்தி திரையலகின்முதல் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பெற்றது 1960களின் மத்தியில் சினிமா பக்கம் எட்டிப் பார்த்த ராஜேஷ் கன்னாதான்.
உபயம், 1969ல் வெளியான ஆராதனா படம்.. அதற்கு முன் சில படங்கள் நடித்திருந்தாலும் சூப்பர் டூப்பர் ஹிட் எதுவும் கிடையாது.
முதல் படம் ஆக்ரி காட் (தமிழில் சிவக்குமார் நடித்து பூந்தளிர் என ரீமேக் செய்யப்பட்டது.. வா..பொன் மயிலே உந்தன் ஏக்கத்தில் தவிக்குதே என்ற பாடல் மெகா ஹிட்)..
அதற்குப்பிறகு தமிழில் வெளியான சித்தி படத்தின் ரீமேக்கில் ராஜேஷ்கன்னா நடித்தார். பத்மினிக்கு தம்பியாக முத்துராமன் நடித்த ரோல்.இப்படி பட்ட நிலையில்தான ஆராதனாவில் வாய்ப்பு கிடைத்து ஓவர் நைட்டில் சூப்பர் ஸ்டார் ஆனார் ராஜேஷ்கன்னா
ஆராதனாவில் வரும் மேரி சப்னோகி ராணி கபு பாட லை சூட் செய்ய டைரக்டர் சக்தி சமந்தா தயாராக இருந்தபோது கதாநாயகி மெகா ஸ்டாரான ஷர்மிளா தாகூரின் தேதி கிடைக்காமல் தவித்துவந்தார்.
லீடிங் நாயகனாக இல்லாதவர் என்பதால் ராஜேஷ் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து காத்திருந்து விட்டு சும்மா போவார். கடைசியில் ராஜேஷ் சம்மந்தபட்ட ஜீப் பயண மலைப்பாதை காட்சிகளை டைரக்டர் தனியாக படமாக்கிவிட்டார்.
அதன்பிறகு ஷர்மிளா காட்சிகளை மெகபூப் ஸ்டூடி யோவில் பிடித்து காட்சியை தேற்றிவிட்டார். மலை ரயிலில் ஷர்மிளா குலுங்கி குலுங்கி சிரிக்கும் அத்தனை காட்சிகளும் ஸ்டுடியோவே..
இந்த பாடல் மட்டுமின்றி ஒரே ஷாட்டில் படம் பிடிக்கப்பட்ட ரூப்பு தேரா மஸ்தானா பாடல் உள்பட படத்தின் அத்தனை பாடல்களும் ஒட்டுமொத்த இந்தியாவை பைத்தியம் பிடிக்கவைத்துவிட்டன.
இந்தியே தெரியாத தமிழ்நாட்டில் கிராமங்களில்கூட ஆராதனா டீ ஸ்டால், ஆராதனா முடிதிருத்தகம் என சகட்டுமேனிக்கு முளைத்தன என்பது இப்போதைய தலைமுறையினருக்கு தெரியாத விஷயம்.
இந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை பெற்றுவிட்ட ராஜேஷ் கன்னா ஆராதனாவிலிருந்து தொடர்ந்து இடைவெளியே இல்லாமல் 15 படங்களை ஹிட் கொடுத்தார். அந்த ரெக்கார்ட் இன்றும் முறியடிக்கப்படவில்லை.
இந்தி நடிகர் ராஜேஷ் கன்னாவுக்கு மார்க்கெட் வேல்யூ எவ்வளவு இருக்கிறது என்று அவருக்கே உணர்த்தியவர் நம்ம ஊரு சினிமா தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் தான்..
மேல் சட்டை கூட இல்லாமல் சந்தனம் பூசப்பட்ட மார்போடு மும்பையில் உலவியா சின்னப்பா தேவர் எப்படியோ ராஜேஷ்கன்னா பிடித்து ஹீரோவாகப் போட்டு ஹாத்தி மேரா சாத்தி என்று ஒரு படம் எடுத்தார்.. 1971இல் இந்தி திரைப்படங்களில் அதிக வசூல் செய்த நம்பர் ஒன் திரைப்படம் தேவர் தயாரித்த அந்த படம்தான்.. நல்லநேரம் என எம்ஜிஆரை வைத்து தேவர் தமிழில் ரீமேக் செய்தது இந்த படத்தையே..
சினிமா சம்பளத்தோடு விநியோக உரிமையும் கேட்டு வாங்கி சம்பாத்தியத்தை அதிகப்படுத்த வழி பாருங்கள் என்று ராஜேஷ்ன்னாவுக்கு யோசனை சொன்னவர் தேவர்தான். ராஜேஷ் கன்னாவும் தேவர் சொன்னதை அலட்சியப்படுத்தாமல் டைரக்டர் சக்தி சமந்தாவோடு சேர்ந்து
பரிதாபம் என்னவென்றால் எந்த ராஜேஷ்கன்னாவை ஷர்மிளா தாகூர் காக்கவைத்தாரே அதே ராஜேஷ்பின்னால் பின்னாளில் வெற்றிக்காக அம்மணி தொடர்ந்து ஓட வேண்டியிருந்ததுதான்
1970கள் காலத்து டீன் ஏஜ் பெண்களுக்கு மாப்பிள்ளை என்றால் ராஜேஷ்கன்னா மாதிரிதான் இருக்க வேண் டும் ஆசைப்பட்டார்கள்..அப்படியொரு கிரேஸ் கன்னாமீது ..
சென்னையில் ராஜேஷ் வந்த காரை கட்டிப்பிடித்து லிப்ஸ்ட்டிக்கால் இளம்பெண்கள் முத்த மழை பொழிந்த சம்பவமெல்லாம் உண்டு..
அமர் பிரேம் படப்பாடல் சூட்டிங்கைக்காண கொல்கத்தா ஹௌரா பிரிட்ஜ் மேல் கட்டுக்கடங் காமல் திரண்ட ரசிகர்களால் நெரிசல் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு என்ற நிலை வந்து, கடைசியில் ஸ்டுடியோவுக்குள் பாடலை படமாக்கிய வரலாறெல்லாம் வியப்பானவை..
ராஜேஷ்கன்னா டாப்பில் இருந்தபோது, பாம்பே பல்கலைக்கழகம் அவரின் செல்வாக்கு பற்றி. பாட புத்தகத்தில் ஒரு கட்டுரையே வைத்திருந்தது.. அந்த கால கட்டத்தில்தான் குழந்தைகளுக்கு ராஜேஷ் என்கிற பெயரை சூட்டும் படலமும் அதிகரித்தது…
ஸ்டைல் ப்ளஸ் கிஷோர் குமாரின் வாய்ஸ் இரண்டும் அசாத்தியமான பலம் ராஜேசுக்கு.. கிஷோரின் பாடல்கள்தான் ராஜேஷ்கன்னாவுக்கு சிம்மாசனம் போட்டவை.. அதே பாடல்கள்தான் இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.
தனிப்பட்ட வாழ்வில் பாபி என்ற ஒரே படத்தின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்த டிம்பிள் கபாடியாவை மணந்தது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்
ஆனால் அதற்கு முன் நடிகைஅஞ்சு மகேந்திரா வுடனும், டிம்பிளை மணந்த பின் டீனா முனீமுடனும் பல ஆண்டுகள் காதல் வாழ்வை நடத்தி வந்ததும் பலருக்கு தெரியாத விஷயமாக இருக்கலாம்.
ராஜேசுடன் மணமாகாமல் குடும்பம் நடத்திவந்த டீனா முனீம்தான் இப்போது அனில் அம்பானிக்கு மனைவியாக இருப்பவர்.
அமிதாப்பச்சன் ஷோலோவில் தலைதூக்கும்வரை அண்ணன் ராஜேஷ் கன்னாவின் ஆட்டம்தான் இந்தியாவை அதிரவைத்தது..
1969-1971 மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக 15 பிளாக்பஸ்டர் படங்கள்.. இன்று வரை இந்திய சினிமாவில் ராஜேஷ் கன்னாவின் இந்த ரெக்கார்டு உடைக்க படாமலேயே உள்ளது..
ஹேர் ஸ்டைல், டிரெஸ், மேனரிசம் என பலவிஷயங்களிலும் ரசிகர்கள் மட்டுமல்ல மற்ற சில நடிகர்களும் பின்பற்றும் வகையில் தனி டிரெண்டை உருவாக்கியவர்..
காக்காஜி என செல்லமாக அழைக்கப்படும் ராஜேஷ்கன்னா இன்று உயிரோடு இருந்திருந்தால் 78வது பிறந்தநாளை கொண்டாடி இருப்பார்.
கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன்