சிம்லா:

மாசலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் திடீர் விபத்தில்  46 பேர் உயிரிழந்துள்ளனர்.  மீட்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

இமாசலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்கள் அடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளது. நேற்று முன்தினம்மா இமாச்சல பிரதேசத்தில் கோத்புரி என்ற இடத்தில் மழை காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இரு பேருந்துகள் நள்ளிரவு நின்று கொண்டிருந்தன.

அப்போது பெய்த கனமழை காரணமாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், ரோட்டில் நின்று  கொண்டிருந்த இரண்டு பேருந்துகளும் அடித்துச்செல்லப்பட்டு  800 மீட்டர் வரை உருண்டு, பள்ளத்தில் விழுந்து புதையுண்டன.

இதில், ஒரு பேருந்து முற்றிலுமாக இடிபாடுகளில் புதைந்துவிட்டதால், அந்தப் பேருந்து புதைந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மற்றொரு பேருந்தின் சிதைந்த பாகங்கள், சாலையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு அப்பால் கண்டெடுக்கப்பட்டன.

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

காவல் துறையினர், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் கொட்டும் மழையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

பேருந்துகளில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை என்றும், குறைந்தது  50 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என்று  மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.எஸ்.பாலி கூறி உள்ளார்.

ஜம்முவுக்குப் புறப்பட்டுச் சென்ற பேருந்தில் 8 பயணிகளும், சம்பாவுக்குச் சென்ற பேருந்தில் 47 பேரும் பயணம் செய்ததாக தகவல் கிடைத்துள்ளதாக  காவல்துறை தலைவர் சோமேஷ் கோயல் கூறினார்.
இந்த நிலச்சரிவி விபத்தில்,  ஜம்மு பேருந்தில் பயணம் செய்த 8 பேரில், 3 பேர் உயிரிழந்து விட்டனர். காயத்துடன் மீட்கப்பட்ட 5 பேர் மண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளில் இருந்து இதுவரை 46 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 23 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் சடலங்கள் உள்ளதா என்று தேடுதல் பணி  நடை பெற்று வருகிறது.