சென்னை
நிதி நிலை அறிக்கையில் செய்தி அச்சடிக்கும் தாளுக்கான ஆயத் தீர்வை அதிகரிப்பால் செய்திதாள் ஊடகம் பாதிப்படையும் என மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.
செய்தி அச்சடிக்கும் தாள் உற்பத்தி இந்தியாவில் கடுமையாக குறைந்துள்ளது. அதனால் வெளிநாட்டை மட்டுமே செய்தித்தாள் ஊடகங்கள் நம்பிக் கொண்டு உள்ளன. சமீபத்தில் சீனா தனது செய்தி அச்சடிக்கும் தாள் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் சீனா ஏற்கனவே குறைந்த தரமுள்ள செய்தி தாள் காகிதத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கபடுவதாக கூறி தடை செய்துள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு ஆயத் தீர்வை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பொருட்களில் செய்தி அச்சடிக்கும் தாள் களும் அடங்கும். தற்போது இந்த தாள்களுக்கு ஆயத் தீர்வை 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், “இந்த நிதிநிலை அறிக்கையில் இறக்குமதி செய்யப்படும் செய்தி அச்சடிக்கும் தாள்களுக்கு ஆயத் தீர்வையை 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் செய்தித் தாள் ஊடகம் கடும் பாதிப்படையும். அத்துடன் செய்தித் தாள்களால் உண்மையான செய்தியையும் எவ்வித கருத்துக்களையும் வெளியிட முடியாத நிலை உண்டாகும். இந்த வரி உயர்வு ஜனநாயகத்தின் தூணான செய்தித்தாள் ஊடகத்தை பலவீனப்படுத்தும்.” என கூறி உள்ளார்.