அனந்த்நகர்:
காஷ்மீரில் 270 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மக்களவை தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு ஏதுவாக பாதுகாப்புப் படையினர் காஷ்மீருக்கு வருவதற்காக, மே 31-ம் தேதி வரை உதாம்பூரிலிருந்து பாரமுல்லா வரையிலான 270 கி.மீ தேசிய நெடுஞ்சாலையை மூட ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொதுமக்களின் வாகனங்கள் இந்த வழியே அனுமதிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காஷ்மீர் பள்ளத்தாக்கையும் வெளி உலகையும் இணைப்பது இந்த நெடுஞ்சாலைதான். இதனை மூடியதால் நோயாளிகள், பள்ளி குழந்தைகள், வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்படும் காலங்களிலும், மோசமான வானிலை இருக்கும் காலங்களிலும் வர்த்தக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க அனுமதிப்பர்.
உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வெளியே கொண்டு செல்ல குறைந்தது 3 நாட்களாக எங்களை அனுமதிக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
யோசிக்காமல் இந்த தடையை விதித்துள்ளனர். சேமித்து வைத்துள்ள பழங்களை காஷ்மீர் மாநிலத்துக்குள்ளேயே எடுத்துச் செல்ல முடியவில்லை என்று பழ வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தின் கிராமப் புறங்களில் மருத்துவ வசதி கிடையாது. சிகிச்சைக்காக ஸ்ரீநகருக்குத் தான் செல்ல வேண்டும். வாகனங்கள் தடை செய்யப்பட்ட இந்த நெடுஞ்சாலை வழியே தான் சென்று வரவேண்டும்.
காஷ்மீரில் தெற்கு மற்றம் வடக்கு பகுதி மக்கள் மருத்துவமனைக்கு செல்ல இந்த நெடுஞ்சாலையைத் தான் பயன்படுத்தியாக வேண்டும். இந்த தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் அரசியல் கட்சிகளும், வர்த்தகர்களும் முடிவு செய்துள்ளனர்.