திருவனந்தபுரம்
உலகளவில் 60 வயதைக் கடந்தவர்கள் COVID-19 தாக்குதலுக்கு உள்ளானால் High risk – உயிர் பிழைத்தல் அரிது என்ற நிலையை மாற்றி கேரளாவில் 93 வயதுடைய மூத்த தம்பதிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
93 வயதுடைய முதியவருக்கு கடுமையான இருமல், மார்புச் சளி, சிறுநீரகத் தொற்று மற்றும் இதயம் தொடர்பான வயது முதிர்வு நோய்களால் சிரமப்பட்டார். 88 வயதுடைய அவரின் மனைவி இதே உடல் உபாதைகளுடன் கடுமையான சிறுநீரகத் தொற்று மற்றும் பாக்டீரியத் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார். இருவரும் கோட்டையம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கேரள நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா நேரடிக் கவனிப்பில் மூத்த தம்பதியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குடும்பத்தின் மேலும் மூன்று உறுப்பினர்களுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அனைவரும் நலமுடன் உள்ளனர்.
கோட்டையம் மருத்துவக் கல்லூரியின் ஏழு மருத்துவர்கள், 25 செவிலியர்கள் உட்பட 40 மருத்துவ ஊழியர்கள் அடங்கிய குழு இதனை சாத்தியப் படுத்தியுள்ளது.
பிப்ரவரி மாதம் இத்தம்பதியின் மகன் தன் குடும்பத்துடன் இத்தாலியில் இருந்து தாயகம் திரும்பினார். அவர்களிடமிருந்தே தம்பதியருக்கு கொரோனாத் தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்களின் அயராத உழைப்பாலும், அரசின் துரித நடவடிக்கைகளாலும் 24 நாட்களுக்குப் பிறகு 5 பேரும் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். குணமடைந்தோர் மருத்துவமனை, மற்றும் அரசுக்கு தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இந்தியாவிலேயே கொரோனாத் தொற்று அதிகம் உறுதி செய்யப்படும் மாநிலங்களில் கேரளம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது…. ஏற்கெனவே கொரோனாத் தொற்றுடைய மூவரை முழுமையாக குணப்படுத்திய முதல் மருத்துவமனை என்ற பெருமையும் இந்த மருத்துவக் கல்லூரிக்கு உண்டு.