வீட்டில் இருந்தபடியே வருமான வரி வசூலிக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

Must read

டில்லி

தேசிய ஊரடங்கு கார்ணமாக வீட்டில் இருந்தபடியே  வருமான வரி பாக்கியை வசூலிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு இட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி இந்த ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பான் மாற்றும் ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவும் மூன்று மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால் வருமான வரி அதிகாரிகளை வீட்டிலிருந்து பணி புரிய உத்தரவு இடப்பட்டுள்ளது.  ஆனால் வருமான வரி பிசினஸ் அப்ளிகேஷன் தளத்தை வீட்டில் இருந்து பயன்படுத்த முடியாது என்பதால் அதிகாரிகள் பணிகள் முழுவதுமாக முடங்கி உள்ளன. எனவே வருமான வரி ஆணையர் ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

வருமான வரி ஆணையர் ராகேஷ் குப்தா, “வீட்டில் இருந்து பணி புரியும் அதிகாரிகளால் தற்போது வருமான வரி பிசினெஸ் அப்ளிகேஷனை பயன்படுத்த முடியாது.  ஆனால் தொலைப் பேசி மற்றும் இ மெயிலை பயன்படுத்த முடியும்.  எனவே வருமான வரி பாக்கி நிலுவையில் உள்ளோரை தொலைப்பேசி அல்லது மெயில் மூலம் தொடர்பு கொண்டு பாக்கியை வசூல் செய்ய வேண்டும்.

அத்துடன் தினசரி எத்தனை பேரை தொடர்பு கொண்டனர் என்னும் விவரத்தையும் தவறாது அன்றன்று அரசுக்கு அளிக்க வேண்டும்” என அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வங்கிக் கடன் தவணைகள், வரித் தொகை செலுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு அரசு ஏற்கனவே கால அவகாசம் அளித்துள்ள நிலையில் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

More articles

Latest article