சென்னை: திருவள்ளூர் தொகுதியில் 5.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
18வது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 16ந்தேதி அன்று நடைபெற்றது. ஜுன் 4ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலம் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது. முன்னதாக இந்த தேர்தரில், தமிழ்நாட்டில், 4 முனை போட்டி நிலவியது. 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிட்டனர். ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் இருந்தனர். இருந்தாலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்பட அனைவரும் பல தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தனர்.
இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 9 இடங்களில் போட்டியிட்டனர். அதன்படி, திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பாலகணபதியும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் நல்லதம்பியும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஸ் சந்தர் உள்பட பலர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர், சசிகாந்த் செந்தில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது, தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரின் டெபாசிட்டுகளும் காலியானது.
அதே வேளையில், தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் மாணிக்கம் தாகூர் விருதுநகரில் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரனை வென்றார்