சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் பெற்று தவறியவர்களில், பெரிய நிறுவனங்களைவிட சிறு கடனாளிகளிடம்தான் அதிக அளவில் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.

2016-17 முதல் 2025-26 வரையிலான 10 ஆண்டுகளில், ரூ.1 கோடிக்கும் குறைவாக கடன் பெற்றவர்களிடம் இருந்து ரூ.5,004.28 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ரூ.100 கோடிக்கும் மேல் கடன் பெற்ற பெரிய நிறுவனங்களிடம் இருந்து ரூ.3,874.41 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

பெரிய கடனாளிகளின் ரூ.26,701.55 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை வெறும் 14.5 சதவீதம் மட்டுமே. ஆனால், சிறு கடனாளிகளின் ரூ.6,774.23 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதில் 74 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

புனேவைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் விவேக் வேலங்கர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை மனுவுக்கு அளிக்கப்பட்ட பதிலில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. இதுகுறித்து MoneyLife செய்தி வெளியிட்டுள்ளது.

பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனை செலுத்தத் தவறியிருந்தாலும், அவர்களின் பெயர்களை சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிடவில்லை என்று MoneyLife தெரிவித்துள்ளது.

கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும், வங்கிகள் அந்தத் தொகையை தொடர்ந்து வசூலிக்க முடியும். அதனால், தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கான வசூல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

பெரிய கடனாளிகளின் கடன் தள்ளுபடி தொகை மிக அதிகமாக இருக்கும் நிலையில், சிறு கடனாளிகள் தங்களது கடனில் ஒரு பகுதியையாவது திருப்பிச் செலுத்துவதில் அதிக நம்பகத்தன்மையுடன் இருப்பதாக இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மேலும், பெரிய அளவில் கடன் செலுத்தத் தவறிய நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுவதில் ரிசர்வ் வங்கியும் முழுமையான தகவல்களை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஆர்டிஐ ஆர்வலர் விவேக் வேலங்கர், இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகமும் அமைதியாக வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் இயக்குநர்கள் குழுவும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.