சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக சென்னை  அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனை உரிமம்  தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளதாக  தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயித்து உள்ளது.  மேலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தார், அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என எச்சரிக்கைப்பட்டிருந்தது.

இருந்தாலும் பல தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளிடம் இருந்து லட்சக்கணக் கில் பணத்தைபிடுங்கி வருகின்றன. இது தொடர்பான புகாரில் ஏற்கனவே சில மருத்துவ மனைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது,  சென்னை அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கொரோனா கட்டணம் தொடர்பான புகார் வந்த நிலையில்,   அரும்பாக்கத்தில் உள்ள அப்பாசாமி ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், கொரோனா நோயாளி ஒருவருக்கு 18 நாட்கள் சிகிச்சைக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் முன்பணமாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் போக மீதி கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து அந்த ஆஸ்பத்திரிக்கு கொரோனா நோய் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
இதனை தவறும் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.