இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருந்த கொலையுதிர் காலம் டைட்டில் பிரச்சனை காரணமாக வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலை சுஜாதாவின் மனைவியிடம் இருந்து ரூ.10 லட்சம் ரூபாய்க்கு தனது அம்மாவின் பெயரில் விடியும் முன் புகழ் இயக்குனர் பாலாஜி குமார் வாங்கியுள்ளதாகவும், உரிமம் பெற்றுள்ள கொலையுதிர் காலம் என்ற டைட்டிலில் படத்தை வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல் என்றும் கூறி இந்த டைட்டிலில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இப்படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டதோடு, சென்ற 21ம் தேதிக்குள் இந்த மனு குறித்து பதிலளிக்கும்படி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தார் .
இந்த தடையை நீக்கக்கோரி படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் படத்தின் தலைப்புக்கு எந்த ஒரு காப்புரிமை கிடையாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தலைப்புக்கு எந்த ஒரு காப்புரிமை இல்லாத காரணத்தினால் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.