சென்னை :   சென்னை தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே கட்டப்படும்  உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளது. ரூ.621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம்  இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த உயர்மட்ட சாலை அமைப்பது குறித்து, இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டு தொழில் நுட்ப நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த உயர் மட்ட  சாலையானது,  மெட்ரோ ரயில் சுரங்கங்கள் அமைந்துள்ள நேர்பாட்டில் கட்டப்பட உள்ளது. இது தமிழ்நாட்டில்  முதல் உயர்மட்ட சாலை என்பதுடன், சென்னை மாநகரின் மிக நீண்ட பாலம் என்ற பெருமைக்கும் சொந்தமாகும். மேலும்,  இந்த பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது, வாகன ஓட்டிகள்,  இதன்மூலம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.5 கி.மீ தூரத்தை 3 முதல் 5 நிமிடத்திலேயே கடந்து செல்ல முடியும்.

இதுகுறித்து கூறிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்,   400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை அண்ணா சாலை, மாநகரின் மிகவும் முக்கியமான சாலை என்பதால் போக்கு வரத்து நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது. மேலும், இந்த வழித்தடத்தில், பல்வேறு அரசுத் துறைகளின் தலைமையங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் வர்த்தக மையங்கள், வணிக வளாகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள்,  விடுதிகள் என பல நிறுவனங்களும் உள்ளதால், எப்போதும் வாகனங்கள் வந்து செல்வதும், பொதுமக்களும் வருவது போவதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதனால் பல நேரங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எல்ஐசி முதல் சைதாப்பேட்டை வரை வாகனங்கள் அணிவகுத்து செல்லும் நிலை அவ்வப்போது ஏற்படுகிறது.

இதுபோன்ற பிரச்சினைக தீர்க்கும் வகையில், திமுக அரசு,  கடந்த 2022-23ம் நிதியாண்டில் அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ₹621 கோடியில் நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை அமையும் என அறிவித்தது.  சட்டப்பேரவையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது,  , சென்னை அண்ணா சாலையில், 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.  7 முக்கிய சாலை சந்திப்புகளை கடக்கும் வகையில் சைதாப்பேட்டை பேருந்து நிலை யம் வரை 3.20 கி.மீ நீளத்திற்கு 14 மீட்டர் அகலம் கொண்ட 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது,  தேனாம்பேட்டை யிலிருந்து – சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான ஆழ்வார்பேட்டை தேனாம்பேட்டை பகுதிகளை பாண்டிபஜார் அண்ணாசலையுடன் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தி.நகர் பகுதிகளை இணைக்கும் தியாகராயா சாலை சந்திப்பு, டி.டி.கே சாலையை அண்ணாசாலையுடன் இணைக்கும் எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு, சென்னை மாநகரின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான நந்தனம் சந்திப்பு, தி.நகர் பேருந்து நிலையம், உஸ்மான் சாலையை இணைக்கும் சிஐடி நகர் 3வது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு, சைதாப்பேட்டையில் உள்ள தாடண்டர் நகர் – ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகிய 7 முக்கிய சாலை சந்திப்புகளை கடக்கும் வகையில் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை 3.20 கி.மீ நீளத்திற்கு 14 மீட்டர் அகலம் கொண்ட 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வல்லுநர்கள், ஐஐடி மெட்ராஸ் வல்லுநர்கள் மற்றும் இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டு தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து இந்த உயர்மட்ட சாலை  அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  ரூ. 621 கோடியில்  இந்த திட்டத்தை மேற்கொள்ள இறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 2024 ஜனவரியில் இந்த உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான அடிக்கல்லை முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டினார். தொடர்ந்து, தேர்தல் அறிவிக்கப்பட்டதால், கட்டுமான பணிகள்  தடைபட்ட நிலையில்,  தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதற்கான ஒப்பந்த பணி 3 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும்,  குறிப்பிட்ட காலத்திற்குள்ள பணிகள் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.