சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு அறிவித்ததை விட அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழகஅரசு கல்வி கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆனால், பல கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனையடுத்து அதிகம் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எழுதிய கடிதத்தில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களிடம் அதிகம் கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், கட்டண நிர்ணய குழு அறிவித்த கட்டணத்துக்கு அதிகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் என்றும், அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து சுயநிதி நிறுவனங்களும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.