மதுரை: முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை மறுப்பு தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்தியாவில் மொத்தம் 6228 முதுநிலை பல்மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் 1352 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இவற்றில் 50% இடங்கள், அதாவது 676 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். அதேபோல், நாடு முழுவதும் மொத்தம் 23,729 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 18,000 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு சொந்தமானவை என்பதால், அவற்றில் 50%, அதாவது சுமார் 9000 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். இதுமட்டுமின்றி கடந்த 2020ம் ஆண்டு மத்தியஅரச, முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகஅரசு, கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு, எம்.டி., எம்.எஸ்., போன்ற மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடும், 30 சதவீதம் ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தனியார் மருத்துவர் பார்க்கவியான் தொடர்ந்த வழக்கில், தமிழகம் முழுவதும் உள்ள முதுகலை மருத்துவப் படிப்பில் 1968 இடங்கள் உள்ளதாகவும், இதில் 50 சதவீதம் அகில இந்திய இட ஒதுக்கீடுக்கு சென்றுவிடுவதாகவும், மீதமுள்ள 969 இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகஅரசின் அறிவிப்பை உறுதி செய்திது.
இந்த நிலையில், முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிடக்கோரி தனியார் மருத்துவர்கள் ஸ்ரீநந்தினி, பாக்கியராஜ் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தனர்.