சென்னை: தமிழ்க்கடவுன் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்தரித்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த நாத்திகன் மற்றும் செந்தில்வாசன் ஆகியோர் மீது, தமிழக அரசு போட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் சார்பில், முருகனின் பதிகமான கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டது. இது இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஆங்காங்கே போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், இதுகுறித்து ஏராளமானோர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் நாட்டின் மத ஒற்றுமைக்கு கேடு விளைக்கும் வகையில் இருந்ததால், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், கறுப்பர் கூட்டம் என்ற சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, அந்த அமைப்பைச் சேர்ந்த நாத்திகன் மற்றும் செந்தில்வாசன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நாத்திகனின் மனைவி கிருத்திகா மற்றும் செந்தில்வாசன் ஆகியோர், ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமையை ஒழிக்கவும் பல்வேறு தகவல்களை வெளியிட்டதற்காக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், கறுப்பர் கூட்டத்தினரின் செயல்பாடு குறிப்பிட்ட மதத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி, கடும் எதிர்ப்பைச் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகளைத் அடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் கைது செய்யும் உத்தரவு பிறப்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள காரணத்தின் அடிப்படையில், இருவர் மீதான குண்டர் சட்டத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது. ஒரே வழக்கிற்காக குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து உள்துறைச் செயலாளரிடம் அளித்த மனு மீது உரிய காலத்தில் முடிவு எடுக்கவில்லை என விடுதலை செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.