சென்னை: இரட்டை அர்த்தத்துடன் கூடிய ஆபாச படமான ‘இரண்டாம் குத்து’ படத்தின் டீசரை சமூகவலைதளங்களில் இருந்து உடடினயாக நீக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இருட்டு அறையில் முரட்டு குத்து வரிசையில் சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘இரண்டாம் குத்து’. இந்த படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி கடும் விமர்சனத்துக்குள்ளானது. சாலையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை மக்கள் கிழித்தெறியும் வகையில், ஆபாசத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தது அந்த போஸ்டர்கள்.. இதுகடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதற்கு கண்டனம் தெரிவித்த இயக்குனர் பாரதிராஜா, தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இந்த போஸ்டரை பார்க்கக் கூசியிருக்கும்?? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது… நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன் என்று காட்டமாக கண்டித்திருந்தார்.
இதை தொடர்ந்து, வெளியாகிய இரண்டாம் குத்து படத்தின் டீசரும் சமூக வலைதளங்களில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. அது அருவறுக்கத்தக்க வகையில், டபுள் மீனிங்குடன் இருந்தது.
இதையடுத்து, இரட்டை அர்த்தத்துடன் கூடிய ஆபாச படமான ‘இரண்டாம் குத்து’ படத்தை வெளியிட நிரந்தரத் தடை கோரி லட்சுமி என்பவர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, இரண்டாம் குத்து படத்தை தணிக்கை செய்து, பின்னரே ஏ சான்றிதழுடன் வெளியிட அனுமதி தரப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், படத்தில் உள்ள ஆபாச வசனங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், டீசரின் வசனங்கள், காட்சிகள் எல்லாம் ஆபாசமானதாக இருப்பதாகவும் இது போன்ற டீசர்கள் வருவது நல்லதல்ல. இது சமூக ஒழுக்கக்கேடுகளை அதிகரிக்கும் என்று கூறி, அனைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து இரண்டாம் குத்து படத்தின் டீசரை உடனே நீக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் இது தொடர்பாக உள்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, தணிக்கை குழு, டிஜிபி, படத்தின் இயக்குனர் விளக்கம் தரவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.