தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மேற்பார்வை செய்வதோடு, மாணவர் சேர்க்கை குறித்தும் முடிவுகளை மேற்கொள்வதில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ஆணையத்துடன், அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் இன்ஃபான்ட் ஜீசச் கல்லூரி சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ஏரனாட்டிக்கல் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் பி.ஏ பட்டய மேற்படிப்புக்கான மாணவர்களின் சீட் எண்ணிக்கையை அண்ணா பல்கலை எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளாமல் குறைத்திருக்கிறது என்றும், இதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் கூறி, பல்கலையின் இம்முடிவுக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, “மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, பட்டப்படிப்புக்கான சீட்களை குறைக்க முற்பட்டாலும் கூட, அதை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ஆணையத்தின் ஒப்புதலுடன் தான் அண்ணா பல்கலை கழகம் மேற்கொள்ள வேண்டும். தனித்து முடிவெடுக்க பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லை.

இதுபோன்ற விவகாரங்கள் முறையாக தகவல் கொடுக்கப்பட்ட உடன் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கைகளை தாமதித்தால் அது பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு வழங்கியுள்ள அங்கீகரமும், மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, விரைந்து செயல்பட வேண்டும்” என்று உத்தரவிட்டது.

இவ்வழக்கில் தங்களின் நடவடிக்கை சரியானது என்றும், பட்டப்படிப்பிற்கான சீட் குறைப்பு முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்கலைக்கு எல்லா அதிகாரமும் உண்டு என்றும் வாதிட்டதோடு, சீட் அதிகரிக்க மட்டுமே அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ஆணையத்தின் ஒப்புதல் பெறவேண்டிய நிலை இருப்பதாகவும் கூறியது.

உடனடியாக குறுக்கிட்ட நீதிபதிகள், மத்திய அரசு வழக்கறிஞரான ராபு மனோகரிடம் இது குறித்து விளக்கம் கேட்டபோது, “அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ஆணையத்தின் அதிகாரம் என்பது சீட் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் குறைப்பதிலும் இருக்கிறது. ஆணையத்தின் அனுமதி இன்றி பல்கலை எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது” என்று விளக்கம் அளித்தார்.

ராபு மனோகரனின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “ஒரு முடிவை எடுக்கக்கூடிய அதிகாரம் இருக்கிறதெனில், அதை மாற்றுவதற்கான அதிகாரமும் இருக்கிறது. மாணவர்களின் சீட் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதிகாரத்தோடு, குறைக்கும் அதிகாரமும் இதில் அடங்கியிருக்கிறது. அதனால் குறைப்பில் ஈடுபடும் அதிகாரம் மட்டும் இருப்பதாக பல்கலை வைத்த வாதம் குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாத நிலையில் இருக்கின்றோம்” என்று தெரிவித்தனர்.

மேலும் தீர்ப்பை சுட்டிக்காட்டி பேசிய தலைமை நீதிபதி, “பர்ஷ்வநாத் சேரிடபிள் டிரஸ்ட் வழக்கில் டிசம்பர் 2012ம் ஆண்டு மத்திய அரசின் அதிகாரத்திற்கு கீழ் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ஆணையம், மாநில அரசுகளின் கருத்துக்களையும் கேட்டு, பரிலீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே தீர்ப்பில் விசாரணை நீதிமன்றம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ஆணையத்தின் அதிகாரம் ஆலோசனை மற்றும் பரிந்துரை வழங்குவதில் மட்டுமே இருப்பதாகவும், பல்கலைகளை கண்காணிக்கவும், வழிநடத்தும் அதிகாரங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அதனால் இவ்விவகாரத்தில் இரு அமைப்புகளும் ஒருமித்த கருத்துடன் செயல்படவேண்டியது அவசியமாகிறது. ஒருமித்த கருத்துடன் செயல்படுவதன் மூலம் கல்லூரிகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.