தங்கம் திருட்டை கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில், திருடு போன நகையின் மதிப்பில் 30% தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வீடு புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தென் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையில் இந்த வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி, “இது அரசின் நல்லெண்ண செயல் அல்ல, பொதுச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிமையான இழப்பீடு” என்று கூறினார்.
பல ஆண்டுகளாக சரியான விசாரணை நடைபெறாமல் “கண்டறியப்படவில்லை” என மூடப்பட்ட திருட்டு வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் சொத்தை பாதுகாக்க முடியாத அரசு தன் பொறுப்பை ஏற்க வேண்டியது அவசியம் என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
திருட்டுத் தங்கம் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால், இழப்பீடாக வழங்கிய தொகையை அரசு திரும்பப் பெறலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், இது போன்று பல்வேறு நகை திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்க முடியாமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளன. அந்த வழக்குகளின், நிலவரம் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது, ஏடிஎஸ்பி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்.
நகை திருட்டு வழக்கில் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை விசாரணை நடத்தி கண்டுபிடிப்பதற்காக, திறமை மிக்க காவல் துறை அதிகாரிகளை கொண்ட ஒரு சிறப்பு காவல் பிரிவை மாவட்டந்தோறும் உருவாக்க வேண்டும்.
விசாரணையின் உத்திகள் மற்றும் புகார்தாரருக்கும், அரசுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் குறித்து நவீன முறையில் ஆன்லைன் மூலம் கையாள்வது எப்படி? என்பது குறித்து விசாரணை அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொழில் நுட்பத்துடன் பயிற்சி வழங்க வேண்டும்” என நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.
சிவகங்கை, மதுரை, கரூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 17 முதல் 87 பவுன் வரை தங்கம் மற்றும் பணம் திருடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளில் CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படவில்லை, அண்டை வீட்டார் விசாரிக்கப்படவில்லை, தடயவியல் சோதனை தாமதமாக அல்லது செய்யப்படாமல் இருந்தது, பிற மாநிலத்தில் இருந்த சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாதது மற்றும் கண்டுபிடிக்க முடியாத வழக்கு என்று வழக்கை முடித்தது குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்காதது உள்ளிட்ட பல்வேறு தவறுகளை சுட்டிக்காட்டி நீதிமன்றம் காவல்துறையினருக்கு உரிய பயிற்சி அளிப்பதுடன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.