சென்னை:  மருத்துவ படிப்பு கட்டணத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.தனியார் மருத்துவக் கல்லூரிகள், 50 சதவீதம் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் வழக்கு தொடந்தன.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அமர்வு  விசாரணை நடத்தியது,.  இந்த வழக்கின் விசாரணையின்போது, தனியார் மருத்துவக் கல்லூரிகள் சார்பில், மத்தியஅரசு கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கும்படி வலியுறுத்தியது. இதற்கு மத்தியஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும், தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் லாப நோக்குடன் செயல்படக் கூடாது என்பதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், தனியார் கல்லூரிகளை முறைப்படுத்த நீதிமன்றங்களும் தொடர்ச்சியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியதுடன், நிபுணர் குழுவை நியமித்து முழுமையாக ஆய்வு செய்த பிறகே, 50 சதவீத மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள், 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு கல்லூரி கட்டணம் வசூலிக்கப்படுவதால், மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால்,  தகுதி வாய்ந்த மாணவர்களால் சேர்க்கை பெற முடியாது எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 50 சதவீத இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணம் வசூலிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், கட்டணத்தை மறுஆய்வு செய்யும் நடைமுறை முடியும் வரை தற்போதை கட்டண முறையை தொடரலாம் என்றும்  அனுமதி வழங்கப்பட்டது.