மதுரை: தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்து உள்ளது. இந்த விவகாரம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், நேற்றே, பள்ளிக்கல்வித்துறை தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுஉள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வான டெட் தேர்வில் வெற்றி பெற்று இதுவரை பணி கிடைத்தவர்களின் சங்கத்தலைவர் ஷீலா பிரேம்குமாரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், நாங்கள் ஏற்கனவே தகுதி தேர்வில் வெற்றி பெற்று, அரசு பணிக்காக காத்திருக்கும் நிலையில், தமிழகஅரசு, தமிழ்நாடு அரசு, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு ஜூன் 23-ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பான வழிமுறைகள் எதுவும் சொல்லப்படவில்லை. இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின்போது, தமிழகஅரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த நிதிபதி, “முறையான வழிகாட்டு தல்கள் இல்லாமல் தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிப்பது பெரும் ஆபத்தாக அமையும் என கூறியதுடன், தமிழகஅரசு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்ட வழக்கை நாளை (இன்று) தள்ளி வைத்தார்.
இதையடுத்து, இந்த வழக்கு இன்று மீண்டும், நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ”ஆசிரியர்களை தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கும், முன்னுரிமை அடிப்படையில் நியமிப்ப தற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நிரந்தரமாக ஆசிரியர்களை நியமனம் செய்வதில் அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது? என கேள்வி எழுப்பியவர், முறையற்ற முறையில் நடைபெறும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தால் தகுதியற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேரும் வாய்ப்பு உள்ளது. ஆசிரியர்கள் நியமனம் மாணவர்களின் நலன் சார்ந்தது. இதில் அரசின் விளக்கம் திருப்திகரமாக இல்லை.
எனவே, தமிழக அரசின் தற்காலி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்றார். பின்னர் அடுத்த விசாரணையை ஜூலை 8-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.