மதுரை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 10-ம் தேதி முதல் ஜனவரி 25-ம் தேதி வரை ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ரவிச்சந்திரனும் ஒருவர். இவரது தாயார், ராஜேஸ்வரி, மகனை பரோலில் 1 மாதம் விடுவிக்க கோரி உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணைநீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, சிறைத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து, ரவிச்சந்திரன் இதுவரை 4 முறை விடுப்பில் சென்று விட்டு சிறைக்கு திரும்பும் வரை எவ்விதமான அசம்பாவிதங்களும் நிகழவில்லை என தெரிவித்த நீதிபதிகள், தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ளதால் ஜனவரி 10 முதல் 25ம் தேதி வரை 15 நாட்களுக்கு ரவிசந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்கி உத்தவிட்டனர்.