சென்னை: கோவில்களில் அறநிலையத்துறை அர்ச்சகர்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மறுத்த உயர்நீதி மன்றம், அர்ச்சகர்கள் நியமனம் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்து கோவில்களில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின்கீழ் அர்ச்சகர்களை நியமித்து வருகிறது. இது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக டிஆர் ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவரது மனுவில், கோயில் அறங்காவலர்கள் மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் அர்ச்சகர்களை அறநிலையத்துறை நியமிக்க அதிகாரம் இல்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயில் அர்ச்சகர்கள் நியமனங்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்படும் அர்ச்சகர்கள் நியமனம் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று கூறியது.
மேலும், அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.