சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட மோதல் வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் மகன் மற்றும் தம்பி ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். அப்போது டிடிவி தினகரன் தரப்பினருக்கும், ஓபிஎஸ் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து தினகரன் அணி சாரிபாக சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், ஆர்.கே.நகர் போலீஸார் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் அவரது தம்பி ஓ.ராஜா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கோரினர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதையடுத்து, ரவீந்திரநாத் குமார் மற்றும் ஓ.ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை ஏப்ரல் 17 வரை நீ்ட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஓபிஎஸ் மகன் மற்றும் தம்பி ஆகிய இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.