புதுடெல்லி: நரேந்திர மோடியின் அமைச்சரவையில், வழக்கம்போலவே உயர்ஜாதிகளின் ஆதிக்கம் இந்தமுறையும் கொடிகட்டிப் பறக்கிறது. 58 பேர் கொண்ட அமைச்சரவையில் 32 உயர்ஜாதியினர் இடம்பெற்றிருப்பதே இதற்கு சான்று.
ஆனால், மக்கள்தொகையில் மிகப்பெரும்பான்மையினரான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு வெறும் 13 இடங்கள் மட்டுமே.
பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களில் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மொத்தம் 9 பேர் இடம்பெற்றுள்ளனர். ராஜ்நாத் சிங், கஜேந்திர சிங் உள்ளிட்ட தாகூர் இனத்தினர் மூன்று பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தர்மேந்திர பிரதான் முக்கியமான பிற்படுத்தப்பட்ட சமூக முகம். இப்பட்டியலில் பிரதமர் மோடியும் அடக்கம். தலித்துகளின் பிரதிநிதிகளாக 6 அமைச்சர்களும், பழங்குடியினரின் பிரதிநிதிகளாக 4 அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
அகாலிதள கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ராத் கவுர் பாதல் மற்றும் பாரதீய ஜனதாவின் ஹர்தீப் பூரி ஆகியோர் சீக்கியப் பிரதிநிதிகளாகவும், முக்தர் அப்பாஸ் நக்வி ஒரேயொரு முஸ்லீம் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.