பிரயாக் ராஜ்
மத்திய நீர் அமைச்சகம் பிரயாக் ராஜ் நகரில் கங்கை மற்றும் யமுனையை இடையில் ஒரு மறைந்து போன நதியைக் கண்டுபிடித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் (முந்தைய அலகாபாத்) நகரில் கங்கை மற்றும் யமுனை நதி சங்கமம் ஆகிறது. இந்த நதிகளுடன் சரஸ்வதி என்னும் கண்ணுக்குத் தெரியாத நதியும் சங்கமிப்பதாகச் சொல்லப்படுவதால் இந்த இடம் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் வளம் குறித்து ஆராயத் தூய்மை கங்கை தேசிய இயக்கம் ஒரு ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் இந்த திரிவேணி சங்கமத்தில் இருந்து 26 கிமீ தூரத்தில் தெற்கே ஒரு நதி வரண்டு போய் நிலத்தின் அடியில் 15 மீட்டர் ஆழத்தில் புதைந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர். இந்த நதி 4 கிமீ அகலம் மற்றும் 45 கிமீ நீளத்தில் இருந்துள்ளது. கங்கைக்கும் யமுனைக்கும் இடையில் யமுனை நதியின் கிளை நதியாக இருந்துள்ளது.
இந்த நதியை தற்போது கண்டுபிடித்ததன் மூலம் புராணத்தில் கண்ணுக்குத் தெரியாத நதி எனக் கூறப்படும் சரஸ்வதி நதியும் இருந்திருக்க வாய்ப்புண்டு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த நதி ஓடிய பகுதிகளில் நிலத்தடி நீர் வளம் நிறைய இருக்கலாம் எனவும் அதற்கான ஆய்வுகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.