தீக்குச்சி திரைப்படம் மூலம் 2007ல் நாயகனாக அறிமுகமானவர் தேவன். தொடர்ந்து, ‘காதல் பஞ்சாயத்து’ படத்தை உருவாக்கிய அவர் தற்போது, ஐந்து மொழிகளில் பொல்லாப்பு, மற்றும் தி ரைட் படங்களை உருவாக்கி வருகிறார்.

‘பொல்லாப்பு’ என்றால் எல்லோரும் விலகி ஓடுவார்கள்.. ஆனால் காவல்துறை மட்டும்தான் தேடி வந்து பிரச்சினையை தீர்க்கும்’ என்பதுதான் பொல்லாப்பு படத்தின் ஒன் லைன்.

நாயகனும் இயக்குநருமான தேவன், “காவல்துறையினரின் கடமை உணர்வை படமாக்கி இருக்கிறேன். அதோடு மது, சிகரெட் ஆகியவற்றினால் இளைஞர் சீரழியக்கூடாது என்கிற மெஸேஜையும் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறேன்” என்கிறார்.

ஜான்சன் இசை அமைக்க, திருப்பதி ஒளிப்பதிவு செய்கிறார்.

ரித்திகா, ஹர்சா ஆகியோர் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள்.

நாயகன் மற்றும் இயக்குநர் தேவன் தொழில் அதிபர்.

“திரைப்படத்துறை மீதான காதலால் படங்களை இயக்கி நடிக்கிறேன். ரஜினி, டி.ஆர்., பாக்யராஜ் என ஒவ்வொருவரிடம் இருந்தும், அவர்கள் படங்கள் மூலமாக பல விசயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

மேலும், “பொல்லாப்பு படத்தில் முதலில் அபிநயஸ்ரீ என்கிற நடிகையைத்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்தேன். ஆனால் பட பூஜை நெருங்கும் நேரத்தில், திடீரென, ‘அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை’ என்று கிளம்பிச் சென்றுவிட்டார். நானும், பாவம் என ஒப்புக்கொண்டேன்.

பிறகு, உடல் நலம் சரியில்லை என சொல்லிச் சொல்லி, பட பூஜைக்கு வருவதையே தவிர்த்து வந்தார். இதனால் பூஜை தள்ளிப்போனது.

பிறகு பூஜைக்கு வருவதற்காக காஸ்ட்யூம் வேண்டும் என்றார். எடுத்துக்கொடுத்தோம்.

அந்த காஸ்ட்யூமையும் எடுத்துக்கொண்டு சென்றவர் வரவே இல்லை.

அவரால் பட பூஜை தாமதமாக நட்டம் ஏற்பட்டது. அதோடு நாங்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தையும் தரவில்லை. போன் செய்தாலும் எடுப்பதில்லை.

அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். ஆர்வத்துடன் திரைத்துறைக்கு வரும் என்னைப் போன்றவர்களை அபிநயஸ்ரீ போன்றவர்களிடம் இருந்து காக்க வேண்டியது என் கடமை” என்றார்.

– இனியன்