டில்லி
வெளிநாட்டு நன்கொடை பெற அனுமதியைப் புதுப்பிக்காததால், திருப்பதி, சீரடி உள்ளிட்ட கோவில்களுக்கு வெளிநாட்டு நிதி கிடைக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது
இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், மத அமைப்புக்கள், அறக்கட்டளைகள், ஆலயங்கள் உள்ளிட்டவை வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்குச் சிறப்பு அனுமதி பெற வேண்டும். அத்தகைய சிறப்பு அனுமதியைப் பெற்றிருந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம், சீரடி சாய்பாபா கோவில், ராமகிருஷ்ண மடம் ஆகியவற்றுக்கு வெளிநாடு வாழ் பக்தர்கள் ஆன்லைன் மூலம் நன்கொடை வழங்கி வந்தனர்.
ஆனால் இந்த அனுமதியைப் புதுப்பிக்காததால் மத்திய உள்துறை அமைச்சகம் 6000 நிறுவனங்களுக்கு வெளிநாடு நிதி உதவியைப் பெற அனுமதி மறுத்துள்ளது. இதில் திருப்பதி கோவில் சீரடி சாய்பாபா கோவில், ராமகிருஷ்ண மடம் உள்ளிட்டவை அடங்கும். இது வெளிநாடு வாழ் பக்தர்களுக்கு மிகவும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவீன் ரெட்டி செய்தியாளர்களிடம்,
“மத்திய உள்துறை அமைச்சகம் தொண்டு நிறுவனங்கள்,மதம் சார்ந்த அறக்கட்டளைகள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து நன்கொடை திரட்டுவதற்கு அந்த அமைப்புகள் அளிக்கும் கோரிக்கைகளைப் பரிசீலித்து அனுமதி அளித்து வருகிறது.
அவ்வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட அமைப்புக்கள் பல்வேறு அறக்கட்டளை நடத்தி வரும் நிலையில் மத்திய அரசின் அனுமதியுடன் வெளிநாடு வாழ் பக்தர்களிடம் இருந்து நன்கொடையைப் பெற்று வந்தன. கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுமதி காலாவதியாகிவிட்டது. அதன்பிறகு அனுமதி புதுப்பிக்கப்படவில்லை என்பதால் வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள் நன்கொடை அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆயினும் இந்த அமைப்புக்கள் குறிப்பாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெறுவதற்குத் தேவையான அனுமதியைப் புதுப்பிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தும் மத்திய உள்துறை அதனைக் கண்டு கொள்ள தவறிவிட்டது.
மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் ஆகியோர் திருப்பதி மலைக்குத் தொடர்ந்து சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். எனவே தேவஸ்தானம் அவர்கள் மூலம் மத்திய உள்துறைக்கு உரிய அழுத்தம் கொடுத்து வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறுவதற்குத் தேவையான அனுமதியைப் புதுப்பித்துக் கொள்ளத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்”
எனக் கூறியுள்ளார்.