புதுடெல்லி: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்ச்சி கட்டாயம் என்றிருந்த நிலையில், தற்போது, பாரம்பரிய மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்று மேலும் இடியை இறக்கியுள்ளது மோடி அரசு.

இந்தப் புதிய அறிவிப்பின்படி, இனிமேல், எம்பிபிஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புடன் சேர்த்து, இதர பாரம்பரிய மருத்துவப் படிப்புகளான பிஏஎம்எஸ், பிஎஸ்எம்எஸ், பியூஎம்எஸ் மற்றும் பிஎச்எம்எஸ் ஆகியவற்றில் சேர்வதற்கும் இனி நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம், ஏற்கனவே மருத்துவப் படிப்பு தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ள திறன்வாய்ந்த ஏழை மாணாக்கர்கள், மேலும் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நீட் தேர்வு மதிப்பெண்களை, பிஎஸ்சி., நர்சிங் மற்றும் பிஎஸ்சி., லைஃப் சயின்சஸ் படிப்புகளில் மாணாக்கர்களை சேர்த்துக் கொள்ளவும், கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2021ம் ஆண்டிற்கான நீட் தேர்வு, ஆகஸ்ட் 1ம் தேதி(ஞாயிறு), பேப்பர் – பேனா முறையில், மொத்தம் 11 மொழிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தொடர்பான விரிவான விபரங்களை அறிய www.ntaneet.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.