ராஞ்சி
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11ஆம் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
கடந்த நவம்பர் 20 முதல் டிசம்பர் 20 வரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. மொத்தம் 81 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி 47 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 25 இடங்கள் மட்டுமே பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு, ஜார்க்கண்ட் விகாஸ்மோர்ச்சா கட்சியின் 3 சட்டமன்ற உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்தன.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி சார்பில் முதல்வராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் திரவுபதி முர்முவைச் சந்தித்து ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி ராஞ்சியில் உள்ள மொஹராபாதி மைதானத்தில் இன்று பதவி ஏற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் ராமேஷ்வர் ஓரன், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சத்யானந்த் போகோடா, காங்கிரஸ் கட்சியின் ஆலம்கிர் ஆலம் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்த பதவி ஏற்பு விழாவுக்குப் பிரதமர் மோடிக்கு ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்திருந்தும் ஏராளமான அலுவல்கள் இருப்பதாலும், பணி நெருக்கடியாலும் தன்னால் பங்கேற்க இயலவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர். ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் பூபேந்திர சாஹல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் மற்றும் திமுக மக்களவை உறுப்பினர்.டிஆர்பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.