வாடிகன்
உலகக் கத்தோலிக்க கிறுத்துவர்களின் தலைவரான போப் ஆண்டவர் நரகம் என ஒன்றும் கிடையாது என தெரிவித்துள்ளது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
இத்தாலியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் யுஜினியோ ஸ்கல்ஃபரி ஆவார். இவர் ஒரு ஆன்மிக வாதி. இவர் இத்தாலியின் புகழ்பெற்ற செய்திதாளில் ஒன்றின் நிறுவனர் ஆவார். தற்போது சுமார் 93 வயதாகும் இவர் பல உலகப் புகழ் பெற்ற தலைவர்களுடன் கலந்துரையாடி உள்ளார்.
பத்திரிகை ஆசிரியர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் தனக்கும் புகழ்பெற்றவர்களுக்கும் நிகழ்ந்த சந்திப்புகள் பற்றி இப்போது எழுதி வருகிறார். அப்போது அவர் கத்தோலிக்க கிறித்துவர்களின் தலைவரான போப் ஆண்டவருடன் தனக்கு நிகழ்ந்த சந்திப்பு குறித்து எழுதி உள்ளார்.
அந்த சந்திப்பில் போப் ஆண்டவர் நரகம் என ஒன்று இல்லை எனக் கூறியதாக எழுதி உள்ளார். அத்துடன் பாவ மன்னிப்பு கிடைத்த ஆத்மாக்கள் இறைவனை சென்றடையும் எனவும் மன்னிக்கப்படாத ஆத்மாக்கள் தண்டிக்கப்பட மாட்டாது எனவும் கூறி உள்ளார். மேலும் போப் ஆண்டவர் அந்த மன்னிக்கப்படாத ஆத்மாக்கள் கண்ணுக்கு புலப்படாமல் மறைந்து விடும் என தெரிவித்ததாகவும் யுஜினியோ கூறி உள்ளார்.
யுஜினியோ தனது பதிவுகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தனது நினைவில் இருந்து எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தோலிக்க கிறித்துவர்களுக்கு பாவம் என்பது நரகத்தில் ஆழ்த்தும் என்பது நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நம்பிக்கை ஆகும். அதை தற்போது கத்தோலிக்க தலைவரே மறுத்துள்ளதாக எழுந்த தகவல் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.