திருவனந்தபுரம்
சபரிமலைக்குச் செல்ல சபரி சர்வீசஸ் என்னும் நிறுவனம் ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்கி உள்ளது.
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி காலங்களில் பல பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கமாகு. அவர்கள் கேரளாவில் உள்ள கோட்டயம் உள்ளிட்ட பகுதிகள் வரை ரெயிலில் சென்று அதன் பிறகு சாலை வழிப் பயணமாக பம்பையை அடைவார்கள். பம்பையில் கூட்டம் அதிகம் வருவதால் பக்தர்கள் வரும் வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து அரசு வாகனம் மூலம் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது சபரி சர்வீசஸ் என்னும் நிறுவனம் சபரிமலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் சேவை அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த சேவை 2019 ஆம் வருடம் நவம்பர் 17 முதல் 2020 ஆம் வருடம் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி வரை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஆதிசங்கரர் பிறந்த இடமான காலடியில் இருந்து நிலக்கல் வரையும் மறுமார்க்கமாக நிலக்கல்லில் இருந்து காலடி வரையும் தினமும் நடைபெற உள்ளது.
இவ்வாறு பயணம் செய்ய ஹெலிகாப்டர் பயணக் கட்டணம், மற்றும் விரைவான தரிசன ஏற்பாடு, நெய் அபிஷேகம் நடத்த உதவுதல் உள்ளிட்டவைகளுக்கு ஒருவருக்கு வரிகள் உட்பட கட்டணம் ரூ.29,500 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் பயண நேரம் 35 நிமிடங்கள் ஆகும். இந்த சேவை தினமும் காலடியில் இருந்து நிலைக்கல் செல்ல ஆறு முறையும், நிலக்கல்லில் இருந்து காலடி திரும்பி வர ஆறு முறையும் நடைபெற உள்ளது.
இந்த சேவை கொச்சினில் இருந்து 10 கிமீ தூரம் உள்ள காலடிக்கு பயண ஏற்படு, காலடியில் இருந்து நிலக்கல்லுக்கு ஹெலிகாப்டர் பயணம், நிலக்கல்லில் இருந்து பம்பை பயணம், மலை ஏறுதல், சன்னிதானத்தில் தரிசனம் செய்ய உதவி, மேல் சாந்தியை சந்திக்கவும் நெய் அபிஷேகம் செய்யவும் உதவி, பம்பையில் மீண்டும் இறங்கியதும் நிலக்கல் அழைத்துச் சென்று அங்கிருந்து காலடிக்கு ஹெலிகாப்டர் பயணம், காலடியில் இருந்து கொச்சினுக்கு பயணம் ஆகியவைகள் உள்ளிட்டதாகும்.