சென்னை
மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் சென்னை குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வரும் திங்கள் அன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் சேர்த்து விடுமுறை நாளாக உள்ளது. அதைப் போல் விஜயதசமி தினமும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை ஆகும். 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல மும்முரம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாகச் சென்னையில் வசிப்போரில் பலர் நேற்றில் இருந்தே தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கியுள்ளனர். இரண்டாவது நாளாக இன்றும், சென்னையில் வசிக்கும் மக்கள், பைக் மற்றும் கார்களில் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகச் சாலைகளில் ஒரே நேரத்தில் குவிந்துள்ளனர்.
இதனால் சென்னையில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சாலைகளில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கின்றன. இவ்வாறு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில், வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்கின்றன.