சென்னையில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது.

இன்று நாள் முழுவதும் கனமழை தொடர்ந்த நிலையில் நீரை வெளியேற்ற முடியாமல் மாநகராட்சி ஊழியர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இதனால் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததை அடுத்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

இதில் 918 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை அடுத்து நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி சார்பில் சுமார் 300 முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் இதில் மொத்தம் 2 லட்சம் பேர் வரை தங்க வைக்க முடியும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாத்தூர், மணலி, அடையார், திரு.வி.க. நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முகாம்களில் ஏற்கனவே பலர் தங்கியுள்ள நிலையில் இன்று பகல் மற்றும் இரவு இருவேளையும் சேர்த்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் மொத்தம் 43500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.