திருவனந்தபுரம்: கேரளாவில் டிசம்பர் 2ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி இந்திய வானிலை மையம், 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காலை தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காரைக்கால் கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வரும் 2ம் தேதி மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகம் மற்றும் கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களுக்க ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து, மீனவர்கள் கடலுக்கு செல்ல கேரள அரசு தடை விதித்துள்ளது. கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள அனைவரும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அச்சுறுத்தப்பட்டு உள்ளது.