சென்னை; சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நள்ளிரவு முதலே சென்னையில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வருவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து தடை பட்டுள்ளதால், பொதுமக்கள், பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குறிப்பாக வடசென்னை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வியாசர்பாடி பகுதியில் உள்ள கணேசபுரம் ரயில்வே பாலம், மேம்பாலப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளதால், வடசென்னைவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், மின் வழியாக செல்லும் பாதை மற்றும் பெரம்பூர் பாலம் வழியில் கடுமையான போக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மழையும் பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது. அனேகமாக நாளை (வெள்ளிக்கிழமை) வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.