ஆப்பிரிக்க நாடான மலாவியில் வரலாறு காணாத கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் இந்த ஆண்டு கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலியாகி இருப்பதாகவும், மேலும் 11 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மலாவியின் பெரிய நகரங்களில் ஒன்றான பிளண்டைர் நகரம் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு கடந்த ஒரு வாரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு வசித்து வரும் பொதுமக்கள் குடிநீருக்காக அல்லாடுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
22ஆயிரம் வீடுகள் உள்பட சுமார் 1லட்சத்துக்கு 10ஆயிரம் பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக மாநில பாதுகாப்புத்துறை அமைச்சர் நிக்கோலஸ் தவுஷி தெரிவித்து உள்ளார்.
அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருவதாகவும், மழை தொடரும் என்றும் வானிலை மையம் அறிவித்து இருப்பதால், அங்குள்ள மக்கள் அச்சத்துடனே காணப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது.