நெல்லை: தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று (ஜன.9) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் மழை கொட்டி வருகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
‘இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையொட்டி, ஆற்றங்கரையோர மக்களுக்கு தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடதமிழக கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை(ஜன.9) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவித்தது. அதன்படி நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறத.
மேலும், நாளை ஜன.10) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். வியாழன் முதல் சனிக்கிழமை (ஜன.11-13) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான முதல் பலத்த மழை பெய்யக்கூடும என்றும், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பலத்த மழை காரணமாக தாமிரபணிக்கு வரும் நீரில் அளவு அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி கரையோர மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் , கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழையாலும், தாமிரபரணி ஆற்றில் அதிகபடியான மழைநீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், உப்பாற்று ஓடை கரையோர பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.