வேலூர்:  நிவர் புயல் ஆந்திர கடலில் நிலைகொண்டுள்ள நிலையில், மாநில எல்லையான வேலூர் திருமண்ணாமலை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ளம் காரணமாக  வேலூர் காட்பாடி அருகே கோழிப்பண்ணைக்குள் வெள்ளநீர் புகுந்ததால், அங்கு வளர்க்கப்பட்டு வந்த சுமார்  2500 நாட்டுக் கோழிகள் நீரிழ் மூழ்கி உயிரிழந்தன. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிவர் புயல் கரையை கடந்த நிலையில், தற்போது வலுவிழந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தெற்கு ஆந்திரா மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட வடமேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் காரணமாக, ஆற்றின் கரையோரம் பகுதியில் உள்ள பி.ஆர்.குப்பம் பகுதியில் உள்ள நாட்டுக்கோழிப் பண்ணைக்குளும்  தண்ணீர் புகுந்தது.  இதனால்,  விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 2 ஆயிரத்து 500 நாட்டுக் கோழிகளும், 5 ஆடுகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தன. அதேபோல் பண்ணை கொட்டகை, கோழி தீவனம் போன்றவையும் சேதமடைந்தன.

இதுகுறித்து கூறிய கோழிப்பண்ணை உரிமையாளர்,  இது தொடர்பாக வருவாய்த்துறைக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும், சுமார் 3 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.