சென்னை: டிட்வா புயலால் கனமழை எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ள  திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அரை நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளும் ஏற்றப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில்  இலங்கை அருகே  மையம் கொண்டுள்ள டிட்வா புயல் காரணமாக இலங்கையில் பலத்த சூறாவளியுடன் மழை பெய்து வருகிறது. அங்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ள கனமழை, தமிழ்நாட்டை தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் சென்னையை நோக்கி நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகை, மயிலாடுதுறை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இன்று காலை நிலவரப்படி, புயல் திரிகோணமலையிலிருந்து (இலங்கை) 50 கி.மீ தெற்கே,. மட்டக்களப்பிலிருந்து 70 கி.மீ வடமேற்கே, துச்சேரியிலிருந்து 460 கி.மீ தெற்கு-தென்கிழக்கே சென்னையிலிருந்து 560 கி.மீ தெற்கு-தென்கிழக்கே உள்ளது. இது  மணிக்கு7 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையோரமாக பயணித்து, மீண்டும் வங்கக்கடலுக்குள் நுழைந்து, பின்னர் நவம்பர் 29 மாலை முதல் நவம்பர் 30 காலைக்குள் தமிழ்நாடு-புதுச்சேரி-தெற்கு ஆந்திரா கடற்கரையை நெருங்கும்.

புயல், கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் மழையில் பாதிக்கப்படாமல் இருக்க திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அரை நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

ட்வா புயலின் மையப்பகுதியில் காற்று மணிக்கு 60-80 கி.மீ வேகத்தில் வீசக்கூடும், சில சமயங்களில் 90 கி.மீ வரை வேகம் அதிகரிக்கலாம். வெளிப்பகுதிகளில் மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் காற்று வீசும், சில சமயங்களில் 55 கி.மீ வரை வேகம் அதிகரிக்கலாம். இதே போன்ற நிலைமைகள் கேரளா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுகளுக்கு அருகே அரபிக்கடலின் சில பகுதிகளிலும் ஏற்படலாம். தற்போது இந்த அமைப்பு தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கை கடற்கரைக்கு அருகே நிலை கொண்டுள்ளது என்று IMD கூறியுள்ளது.

வங்கக் கடலில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ள நிலையில் நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 4 துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.   5 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் ஏற்றப்பட்டுள்ளது.

வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்  என்றும் ஐஎம்டி தெரிவித்துள்ளது.