சென்னை: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் எழுதி உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 17ந்தேதி அன்று  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வருவாய் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு   கடிதம் அனுப்பியுள்ளது. அதில்,   கனமழை சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வதற்கு மாவட்டம் முழுவதையும் தயார்படுத்த வேண்டும். அனைத்து துறைகளுடன் இணைந்து தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.